அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை-அதிகாரிகள் தகவல்
- அரியலூர் மாவட்டத்தில் காலாவதியான விதைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கபடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
- விதைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும்
அரியலூர்:
திருச்சி விதை ஆய்வு இயக்குநர் கோவிந்தராசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைக்கு பின் பாசன வசதிஉள்ள இடங்களில் பருத்தி, எள், உளுந்துஆகிய பயிர்கள் சாகுபடிசெய்யப்படுகின்றன. விவசாயிகள் தங்களுக்கு தேவையான மேற்கண்ட விதைகளை வாங்கும் போது அரசினால் விதை விற்பனை உரிமம் வழங்கப்பட்ட விதை விற்பனை நிலையங்களில் மட்டுமே தங்களுக்கு தேவையான விதைகளை வாங்க வேண்டும்.
அப்படி விதைகளை வாங்கும் போது விற்பனையாளர்களிடம் அவசியம் விற்பனை ரசீதை கேட்டு பெறவேண்டும். இதை பயிர் அறுவடை முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விதை விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு வழங்கும் விற்பனை ரசீதில் விவசாயின் பெயர், ரகம், நிலை, குவியல் எண், காலாவதி நாள் ஆகியவற்றை ரசீதில் குறிப்பிட்டு விவசாயிடம் கையொப்பம் பெற்று விற்பனைச் செய்யவேண்டும்.
காலாவதியான விதைகளை விற்பனைசெய்யக் கூடாது. பருவத்திற்கு ஏற்ற விதைகளை விற்பனை செய்ய வேண்டும்.இதில் ஏதேனும் குறைகள் காணப்பட்டால் விதை விற்பனையாளர்கள் மீது விதைச் சட்டபடி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் விவரங்களுக்கு திருச்சி மன்னார்புரத்திலுள்ள விதை ஆய்வு இயக்குநர் அலுவலக தொலைப்பேசி 0431-2420587 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.