உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தல்
- உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் விதைகள் வாங்க அறிவுறுத்தப்பட்டது
- மனிதனுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது
அரியலூர்,
உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களிலேயே விவசாயிகள் விதைகளை வாங்க வேண்டும் என்று திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநர் கோவிந்தராசு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், மனிதனுக்குத் தேவையான ஊட்டச் சத்துக்களை வழங்குவதில் காய்கறிகளின் பங்கு மகத்தானது. விவசாயிகள் தங்கள் குடும்பத்துக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க தரமான காய்கறிகளை வீட்டுத் தோட்டம் மூலம் பெறலாம். வீட்டுத் தோட்டம் அமைப்பதால் கீழ்க்கண்டபயன்கள் நமக்கு கிடைக்கின்றது.
நச்சு மருந்துகள் இல்லாத காய்கறிகளை உற்யத்தி செய்யலாம். குடும்பத்துக்கு காய்கறி வாங்குவதற்கான செலவைக் குறைக்கலாம். வீட்டுத் தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் காய்கறி கடையில் வாங்குவதைக் காட்டிலும் சுவையாக இருக்கும். சமையலறையில் வீணாகும் நீர் மற்றும் பொருள்களைப் பயன்படுத்தலாம். உடலுக்கும், மனதுக்கும், மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் கிடைக்கும். ஓய்வு நேரத்தை உபயோககரமாக செலவிடலாம்.
எனவே விவசாயிகள் தங்கள் வீட்டுத் தோட்டத்துக்குத் தேவையான காய்கறி விதைகளை வாங்கும் போது மாநில அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விதை விற்பனை நிலையங்களில் வாங்க வேண்டும். மாறாக சாலை ஓரத்தில் உள்ள கடைகளிலோ, மளிகை கடைகளிலோ, சந்தைகளிலோ விற்கப்படும் காய்கறி விதைகளை வாங்கக் கூடாது. விதைகள் வாங்கும் போது பில் கேட்டுப் பெறுவது மிகவும் அவசியம். விவசாயிகள் விற்பனை பட்டியல் பெறா விட்டால் எந்த வித இழப்பீடும் பெற இயலாது என தெரிவித்துள்ளார்.