சாலையோர கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
- வார சந்தை சாலையோரத்தில் நடைபெற்றதால் பாதிப்பு
- மாற்று இடம் வழங்காததால் குழப்பம்
அரியலூர்
அரியலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. பஸ் நிலையம் இடிக்கப்படும் என்பதை அறிந்த பஸ் நிலையத்தில் கடை வைத்திருந்த கடைக்காரர்கள் சென்னை நீதிமன்றத்தில் வருகிற 15-ந் தேதி வரை இடிப்பதற்கு தடை ஆணை பெற்றனர். இந்த நிலையில் கடைக்காரர்களிடம் நகராட்சி சார்பில் மார்ச் மாதம் வாடகை செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளதாக தகவல் தெரிவித்தனர். இந்நிலையில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டு பூமி பூஜை நேற்று நடைபெற்றது. இந்நிலையில் பஸ் நிலையம் அருகே கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த வார சந்தையானது நேற்று முன்தினம் திடீரென நகராட்சியில் இருந்து இவ்வாரம் வார சந்தை செயல்படாது எனவும், இடிக்கப்படும் எனவும் அறிவித்தனர். உரிய காலத்தில் அறிவிப்பு வெளியிடப்படாததால் நேற்று பெரும்பாலான வியாபாரிகள் சந்தைக்கு கடை போட வந்திருந்தனர். கட்டிடம் இடிக்கப்படும் வார சந்தை செயல்படாது என தெரிந்ததை அடுத்து போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரிடம் முறையிட்டனர். சந்தை இடிக்கப்பட்டது. ஆனால் மாற்று இடம் இதுவரை வழங்கப்படவில்லை. சந்தைக்கான குத்தகை இம்மாத இறுதிவரை செலுத்தப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு வரை ஒப்பந்தம் உள்ளது. சந்தைக்கும் இடம் எங்கே என தெரியவில்லை. தற்காலிக பஸ் நிலையம் அமைப்பதற்கான இடமும் எங்கே எனத் தெரியவில்லை என குற்றம் சாட்டினர். இந்த நிலையில் வந்திருந்த வியாபாரிகள் சந்தைக்கு வெளியே சாலையோரத்தில் கடைகள் போட்டிருந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.