உள்ளூர் செய்திகள்

ஜெயங்கொண்டம் அய்யப்பசாமி திருவீதியுலா

Published On 2022-12-17 09:38 GMT   |   Update On 2022-12-17 09:38 GMT
  • ஜெயங்கொண்டம் அய்யப்பசாமி திருவீதியுலா நடந்தது
  • திரளான இருமுடி பக்தர்கள் பங்கேற்பு

அரியலூர்:

அரியலூர் மாவட்டம். ஜெயங்கொண்டத்தில் உள்ள அய்யப்பன் கோவிலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் முதல் தேதி அய்யப்பன் பக்தர்கள் மாலை அணிவித்து விரதம் இருந்து அய்யப்பனை வழிபடுவது வழக்கம். ஜெயங்கொண்டம் மட்டுமல்லாமல் சுற்றியுள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அய்யப்பனை வழிபடுவார்கள்.

சுவாமிக்கு மார்கழி மாதம் முதல் தேதி மிகவும் சிறப்பு வாய்ந்தது.அதனை முன்னிட்டு சுவாமிக்கு கச்சேரி நாதஸ்வரம் முழங்க சிறப்பு நெய் அபிஷேகம் மற்றும் மஞ்சள், சந்தனம் பால், தயிர், திரவியப்பொடி உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து, வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பித்து வழிபட்டனர்.

தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து முக்கிய வீதிகள் வழியாக அய்யப்பன் திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.இதில் கேரளம் செண்டை மேளம் முழங்க, வாணவேடிக்கையுடன், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பல்வேறு அம்மன், அய்யப்பன், சிவன், பார்வதி உள்ளிட்ட சாமிகள் வேடம் அணிந்து வேடதாரிகள் நடனம் ஆடியபடி ஊர்வலமாக வந்தனர். ஜெயங்கொண்டம் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டு சென்றனர்.பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் மற்றும் காலை மதியம் என அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த வீதி உலாவில் ஜெயங்கொண்டம் சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்து அய்யப்பனை வணங்கி சென்றனர்.

Tags:    

Similar News