உள்ளூர் செய்திகள்

வெள்ளம், நிலச்சரிவுகளை தடுக்க ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும்

Published On 2023-02-03 06:15 GMT   |   Update On 2023-02-03 06:15 GMT
  • வெள்ளம், நிலச்சரிவுகளை தடுக்க ஈர நிலங்களை பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
  • அரியலூர் மாவட்ட வன அலுவலர் பேசினார்.

அரியலூர்

உலக ஈர நிலங்கள் நாளை முன்னிட்டு அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் திருச்சி வன மண்டலம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அரியலூர் மாவட்ட வன அலுவலர் குகணேஷ் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது,

ஈர நிலங்கள் நமக்கு எண்ணில் அடங்காத பலன்களைத் தருகின்றன. கடல் அலைகளின் கோரத் தாக்குதலில் இருந்து பாதுகாப்பு, பல்வேறு வகையான பறவைகளின் வாழிடம், சுற்றுச்சூழலில் உள்ள மாசுகளை உறிஞ்சிக் கொள்ளுதல், மண்ணரிப்பைத் தடுத்து நிறுத்துதல், வாடும் பயிருக்கு உயிர் நீராகச் செயல்படுதல், நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துதல், நீர்வாழ் உயிரினங்களுக்கு உயிர் சூழலியல் இடமாகச் செயல்படுதல் உள்ளிட்டவை ஆகும்.

இத்தகைய நிலங்களின் தேவை என்ன என்பதை உணராத பொதுமக்கள் பல நேரங்களில் தங்களின் தேவைகளுக்காக இதனை ஆக்கிரமிக்கும் செயல்களும் அரங்கேறி வருகின்றன. இப்படிப்பட்ட சூழலில் இந்த நிலங்களின் தேவை என்ன என்பதையும் இத்தகைய நிலங்களால் ஏற்படும் நன்மைகள் என்ன என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும், ஈரநிலங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் ஆண்டு தோறும் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

எனவே வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் தடுக்க ஈர நிலங்களை பாதுகாப்பதே மிகச் சிறந்த தீர்வாகும் என்றார்.

பின்னர் அவர் இது தொடர்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, அரியலூர் கல்வி மாவட்ட அலுவலர் சு.ஜெயா, பள்ளி ஆய்வாளர் பழனிசாமி, வனச்சரக அலுவலர் முத்துமணி, வனவர் பாண்டியன் மற்றும் வனத்துறை பணியாளர்கள், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். முடிவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே போல் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஈர நிலங்கள் தினம் கொண்டாடப்பட்டது. 

Tags:    

Similar News