பல்லடம் பஸ் நிலையத்தில் அதிகரிக்கும் சமூக விரோத செயல்களால் பயணிகள் அச்சம்
- அங்கன்வாடி பள்ளி கட்டிடத்திலும் சமூக விரோதச் செயல்கள் நடக்கிறது.
- பல்லடம் பஸ் நிலையத்தில் நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும்.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்தில் சுமார் 10 மாணவர்களுக்குள் திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்கள் சத்தம் போடவே மாணவர்கள் மோதலை கை விட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் மறைந்து சென்றனர். இதனால் பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்:- பல்லடம் பஸ் நிலையத்தில் பயணிகளிடம் பிக்பாக்கெட், மற்றும் உடைமைகள் திருடுவது போன்ற குற்ற செயல்களும், மாணவர்கள் மோதல், மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் பஸ் நிலையத்தில் உள்ள தாய்மார்கள் பால் கொடுக்கும் அறைக்குப் பின்புறம் பயன்படுத்தாமல் உள்ள அங்கன்வாடி பள்ளி கட்டிடத்திலும் சமூக விரோதச் செயல்கள் நடக்கிறது.
இதனால் பஸ் நிலையத்தில் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெண்கள் நடமாடுவதற்கு அச்சமாக உள்ளது. எனவே பல்லடம் பஸ் நிலையத்தில் நிரந்தரமாக போலீசாரை நியமிக்க வேண்டும். அல்லது அடிக்கடி ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.