உள்ளூர் செய்திகள்

முத்தமிழ் முருகன் மாநாட்டு நிறைவில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதீனங்கள் சார்பில் ஆன்மீகச் செம்மல் விருது

Published On 2024-08-26 09:32 GMT   |   Update On 2024-08-26 09:32 GMT
  • 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது.
  • மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

பழனி:

பழனியில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. முதல் நாள் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்த நிலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் நடத்தப்பட்டன.

2-ம் நாள் நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் சிறப்புரையாற்றினார். அப்போது நாத்திக தோட்டத்தில் பூத்த ஆன்மீக மலர் சேகர்பாபு என அவருக்கு புகழாரம் சூட்டினார். தமிழக அரசு சார்பில் செய்யப்பட்டு வரும் பல்வேறு சிறப்பு திட்டங்கள் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.

முத்தமிழ் முருகன் மாநாடு கடந்த 24-ந் தேதி தொடங்கிய நிலையில் அதற்கு முதல் நாள் 23-ந் தேதியே பழனிக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு மாநாட்டுக்கான ஏற்பாடுகள், வசதிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாநாடு நிறைவுபெறும் வரை அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் கண்காணித்து வந்தார். அமைச்சருடன் கலெக்டர் பூங்கொடி, பழனி எம்.எல்.ஏ. செந்தில்குமார், இந்து சமய அறநிலையத்துறை முதன்மை செயலர் சந்திரமோகன், ஆணையர் ஸ்ரீதர் ஆகியோரும் விழா நடந்த 2 நாட்களும் அங்கேயே இருந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர்.


விழா நிறைவில் பல்வேறு ஆதீனங்கள் சார்பில் அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆன்மீகச் செம்மல் விருது வழங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறையை சிறப்பாக நடத்தி வருவதற்காக அமைச்சர் சேகர்பாபுவுக்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் பாராட்டு தெரிவித்ததுடன் விழாக்குழு சார்பில் மயில், சேவல், வேல் பொறிக்கப்பட்ட நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் 6 அடி உயர வேல் பரிசாக வழங்கப்பட்டது. இதனை பொம்மபுரம் ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள் வழங்கினார்.

Tags:    

Similar News