உள்ளூர் செய்திகள்

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் ஜன்னல் கம்பியை உடைத்து கொள்ளை முயற்சி

Published On 2023-04-24 06:55 GMT   |   Update On 2023-04-24 06:57 GMT
  • விவசாயிகள் அடமானமாக வைத்த நகை மற்றும் சொத்து ஆவணங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது.
  • சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த பலலட்சம் மதிப்பு உள்ள அடமான நகை, மற்றும் ஆவணங்கள் தப்பியது.

செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அடுத்த மேலேரிபாக்கம் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி இயங்கி வருகிறது. இந்த வங்கியில் விவசாயிகளுக்கு பயிர் கடன் மற்றும் நகைகடன் வழங்கப்படும்.

விவசாயிகள் அடமானமாக வைத்த நகை மற்றும் சொத்து ஆவணங்கள் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மர்மநபர்கள் 2 பேர் கூட்டுறவு வங்கியின் ஜன்னல் கம்பியை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள் நகை உள்ள அறையின் கதவை உடைக்க முயன்றனர்.

இதனால் அங்கிருந்த அலாரம் ஒலித்தது. சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். உடனே கொள்ளையர்கள் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இதற்கிடையே மர்ம நபர்கள் லாக்கரை உடைக்க முயற்சி செய்ததும் அதில் பொருத்தப்பட்ட கருவி மூலம் கூட்டுறவு வங்கி தலைவர் சத்குருவின் செல்போனிற்கும் குறுந்தகவல் வந்தது. இதுபற்றி அவர் கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்களும் கூட்டுறவு வங்கிக்கு விரைந்து வந்தனர்.

இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சரியான நேரத்தில் அலாரம் ஒலித்ததால் கூட்டுறவு வங்கியில் இருந்த பலலட்சம் மதிப்பு உள்ள அடமான நகை, மற்றும் ஆவணங்கள் தப்பியது. அலாரம் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டு வந்ததும் கொள்ளையர்கள் இரும்பு கம்பிகள், கதவை உடைக்க கொண்டு வந்து இருந்து எந்திரங்களை அங்கேயே போட்டு விட்டு சென்று இருந்தனர். அதனை போலீசார் கைப்பற்றினர்.

வங்கியில் உள்ள கண்காணிப்பு காமராவில் கொள்யைர்கள் 2 பேரின் உருவம் பதிவாகி உள்ளது. கொள்ளையர்கள் புகுந்ததும் முதலில் கண்காணிப்பு கேமிரா வயர்களை துண்டித்து இருந்தனர். கேமராவில் பதிவான உருவத்தை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகிறார்கள்.

வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News