உள்ளூர் செய்திகள்

முழு கொள்ளளவை எட்டிய ஆழியாறு அணை: கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

Published On 2024-11-10 04:55 GMT   |   Update On 2024-11-10 04:55 GMT
  • 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது.
  • இந்த ஆண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பியது.

பொள்ளாச்சி:

கோவை மாவட்டத்தில் பி.ஏ.பி. பாசனத்தில் பொள்ளாச்சி ஆழியாறு அணை குறிப்பிடத்தக்க பங்களிப்பை உடையது. 3864 மில்லியன் கனஅடி கொள்ளளவு உடைய இந்த அணையில் மொத்தம் 120 அடி உயரம் வரை தண்ணீரை தேக்கி வைக்கலாம்.

ஆழியாறு அணையில் தேக்கப்படும் தண்ணீர் ஆயக்கட்டு பாசனம், குடிநீர் திட்டங்கள் மற்றும் ஒப்பந்தப்படி கேரளாவுக்கும் வினியோகிக்கப்படுகிறது.

கடந்த ஜூலை மாதம் 26-ந்தேதி ஆழியாறு அணையில் 118.65 அடிவரை நீர்மட்டம் உயர்ந்தது. தொடர்ந்து 11 மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்பட்டது. மேலும் அவ்வப்போது நீர்வரத்துக்கேற்ப மதகுகள் வழியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தபடி இருந்தது. இதன்காரணமாக 3 மதகுகள் வழியாகவும் வினாடிக்கு 600 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.15 அடியாக இருந்தது. மேலும் வினாடிக்கு 722 கனஅடிநீர் வரத்து உள்ளது. இதனால் ஆறு மற்றும் மதகுகள் வழியாக அணையில் இருந்து வினாடிக்கு 1006 கனஅடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

நேற்று மதியம் 12 மணிக்கு 119.5 அடியாக நீர்மட்டம் இருந்தது. வினாடிக்கு 900 கனஅடி நீர்வரத்தும் இருந்தது. மேலும் மேல்நீராறு, காடம்பாறை பகுதியில் இருந்து தண்ணீர்வரத்து அதிகம் இருந்ததால் 3 மதகுகள் மற்றும் ஆறு வழியாக வினாடிக்கு 1300 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

இந்தாண்டு 10-வது முறையாக ஆழியாறு அணை நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கோவை மாவட்ட நீர்வளத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் அங்கு நீர்மட்டம் ஒரே அளவில் நீடித்து வருகிறது. மேலும் தொடர்மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதால் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை நீடிக்கிறது.

இதனால் அணையின் பாதுகாப்பு கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News