உள்ளூர் செய்திகள்

நாளை மறுநாள் பக்ரீத் பண்டிகை விடுமுறை- ஆம்னி பஸ்களில் திடீர் கட்டண உயர்வு

Published On 2023-06-27 08:51 GMT   |   Update On 2023-06-27 08:51 GMT
  • அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர்.
  • பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

சென்னை:

பக்ரீத் பண்டிகையையொட்டி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) அரசு விடுமுறையாகும். இதனால் வெளியூர் பயணம் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கருதி கூடுதல் பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் தயாராக உள்ளன.

பொதுவாக வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை வெளியூர் பயணம் அதிகரிக்கும். அந்த வகையில் தற்போது இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகை வருவதால் வெள்ளிக்கிழமைக்கு பதிலாக நாளை (புதன்கிழமை) மாலையில் இருந்து மக்கள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதனால் கூடுதலாக சிறப்பு பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் தயாராக உள்ளது. அரசு விரைவு பஸ்கள் கூடுதலாக 100 இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல விழுப்புரம், மதுரை, சேலம், கோவை போக்குவரத்து கழகங்களில் இருந்தும் கூடுதலாக பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அரசு விடுமுறை வருவதால் பஸ், ரெயில்களில் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வகையில் முன் பதிவு செய்யவும் ஆர்வமாக உள்ளனர். அரசு பஸ்களில் வழக்கத்தைவிட நாளை (புதன்கிழமை) பயணம் செய்ய முன்பதிவு அதிகரித்து இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வெள்ளிக்கிழமையை போல் முன்பதிவு கூடி உள்ளது.

குறிப்பாக தென்மாவட்ட பஸ்களுக்கு செல்லக்கூடிய எல்லா ரெயில்களும் நிரம்பிவிட்டன. காத்திருப்போர் பட்டியல் 300-ஐ தாண்டியுள்ளது. தக்கல் முன்பதிவு காத்திருப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.

இதற்கிடையில் விடுமுறை தினத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வார நாட்களில் பொதுவாக குறைந்த அளவில் தான் கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால் பக்ரீத் விடுமுறை வருவதால் நாளைய பயணத்திற்கு அனைத்து ஆம்னி பஸ்களிலும் வழக்கத்தை விட கூடுதலாக கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.

மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில் தென்காசி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்துள்ளது.

கூட்ட நெரிசலை குறைக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நள்ளிரவு வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News