உள்ளூர் செய்திகள்

போலி ஆசிரியர்கள் நியமனம் முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை - கே.பாலகிருஷ்ணன்

Published On 2024-08-31 09:13 GMT   |   Update On 2024-08-31 09:19 GMT
  • அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.
  • ஏ.ஐ.சி.டி.இ., என்.ஐ.டி.டி.ஆர்., அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன.

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பல்வேறு தனியார் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப்பு கல்லூரி என்கின்ற அங்கீகாரத்தை பெறுவதற்காக 2023-24 ஆண்டில் போலியாக ஆசிரியர்களை நியமனம் செய்திருப்பது பெரும் மோசடியாகும்.

அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், 211 நபர்கள் 2500 பதவிகளை நிரப்பியதாகப் பதிவுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளது.

கல்லூரிகளுக்கு நேரடியாகச் சென்று ஆவணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்த ஆய்வுக்குழு, அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலைக்குழு போன்றவை இதனை கவனிக்காமல் போவதற்கு வாய்ப்பே இல்லை. அப்படியானால், நடந்த முறைகேடுகளில் அவர்களும் பங்கு வகித்திருக்கிறார்களா என்ற கேள்வி எழுகிறது.

ஏ.ஐ.சி.டி.இ., என்.ஐ.டி.டி.ஆர்., அண்ணா பல்கலைக்கழகம் என மூன்று அமைப்புகளும் சேர்ந்து மூவர் குழு ஒன்றை விசாரணை செய்வதற்காக அமைத்துள்ளன. குறுகிய காலத்தில் விசாரணையை முடித்து சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது மட்டுமல்லாமல், தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் பல்கலைக்கழக அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் என அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News