உள்ளூர் செய்திகள் (District)

இந்தியா கூட்டணி சார்பில் பந்த்: கடலூர் பஸ் நிலையத்தில் முண்டியடித்து ஏறும் பயணிகள்

Published On 2024-09-18 05:33 GMT   |   Update On 2024-09-18 05:33 GMT
  • புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.
  • அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.

கடலூர்:

புதுச்சேரியில் மின்கட்டண உயர்வை ரத்து செய்யக் கோரி `இந்தியா' கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று (18-ந்தேதி) நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கடைகள், திரையரங்குகள் அடைக்கப்படும். மேலும் பஸ்கள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை ஓடாது என அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுவையில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலம் அருகில் கடலூர் மாவட்டம் உள்ளது. இதன் காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வேலைக்கும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கும், பொதுமக்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று இந்தியா கூட்டணி சார்பில் முழு அடைப்பு போராட்டம் அறிவித்ததால் காலை 6 மணி முதல் தனியார் பஸ்கள் இயக்கப்படவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய அரசு பஸ்கள் காலை 6 மணிக்குள் புதுச்சேரி வழியாக சென்றன.

அதன் பிறகு இயக்கவில்லை. சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்கள் விக்கிரவாண்டி வழியாக சென்றது.


அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கடலூர் மற்றும் புதுச்சேரி போலீசாரை அணுகிய நிலையில், கடலூரில் இருந்து புதுச்சேரிக்கு செல்லும் அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் காலை முதல் இயங்க தொடங்கியது.

அதன்படி கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்ற பஸ்சில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு ஏறினார்கள் . இதன் காரணமாக பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

கடலூர் மாவட்ட எல்லை பகுதியான சின்ன கங்கணாங்குப்பம் வரை கடலூர் மாவட்ட போலீசாரும், அதன் பிறகு புதுச்சேரி மாநில போலீசார் பாதுகாப்புடன் பஸ்கள் இயக்கப்பட்டது.

மேலும் சென்னைக்கு செல்லக்கூடிய பஸ்களை புதுச்சேரி வழியாக இயக்குவதற்கு அதிகாரிகள் தொடர்ந்து புதுச்சேரி மாநில போலீசாருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். போதிய பஸ்கள் இயக்க ப்படாத காரணத்தினால் பொதுமக்கள் அவதியடைந்தனர். 

Tags:    

Similar News