ரூ.1 கோடி மதிப்பிலான விசைப்படகு தீ விபத்தில் முற்றிலும் எரிந்து சேதம்- சதிச்செயல் காரணமா? என போலீசார் விசாரணை
- சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.
- சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமேசுவரம்:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தை அடுத்துள்ள பாம்பன் பிரான்சிஸ் நகரை சேர்ந்தவர் காலின்ஸ். ஆழ்கடல் மீன்பிடி தொழில் செய்து வரும் இவருக்கு சொந்தமாக ரூ.1 கோடி மதிப்பிலான பல்வேறு வசதிகளை கொண்ட விசைப்படகு ஒன்று இருந்தது.
அடுத்தடுத்த புயல் சின்னம் மற்றும் தென் மாவட்டங்களில் பெய்த பலத்த மழை எதிரொலியாக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக காலின்ஸ் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் படகினை தெற்குவாடி துறைமுகத்தில் நிறுத்தி வைத்திருந்தார்.
இதற்கிடையே கடந்த சில தினங்களாக படகில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இன்று முதல் கடலுக்கு செல்ல காலின்ஸ் திட்டமிட்டு இருந்தார். அதற்கான முன்னேற்பாடு பணிகளையும் அவர் மேற்கொண்டு தயார் நிலையில் வைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு திடீரென படகில் இருந்து அளவுக்கு அதிகமாக புகை வந்தது. அடுத்த ஒருசில விநாடிகளில் தீ பிடித்துள்ளது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்துள்ளது. இதைப் பார்த்த மீன்பிடி தொழிலுக்கு தயாராகிக்கொண்டிருந்த சக மீனவர்கள் காலின்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் பதறியடித்துக்கொண்டு அவர் கட லுக்கு ஓடி வந்தார். மேலும் மற்ற மீனவர்கள் உதவியுடன் தீயை அணைக்க போராடினார். இருந்தபோதிலும் படகு முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. படகில் ஏற்பட்ட விபத்து முன்விரோதம் காரணமாக மர்ம நபர்களால் தீ வைக்கப்பட்டதா அல்லது எதிர்பாரத விதமாக தீ பிடித்ததா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
துறைமுகத்தில் 100-க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தப்பட்டிருந்த படகில் ஒரு படகு தீ விபத்துக்குள்ளானது சக படகு உரிமையாளர்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. படகில் இருந்த பேட்டரிகளில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
தீ விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சேதமடைந்துள்ள படகுக்கு உரிய இழப்பீடு வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.