பழனி பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படைவசதிகள் செய்து கொடுக்க வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
- ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை சென்று வருகின்றனர்.
- ஆறுவழிச்சாலையில் பணிகள் நடந்து வருவதால், பாத யாத்திரை செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
திருப்பூர்
முருக பக்தர்கள் பாதுகாப்பாக பழனி பாத யாத்திரை சென்று வர, தேவையான முன்னேற்பாடுகள் செய்யவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கூட்டமைப்பு அண்ணாதுரை, திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- வரும் பிப்., 5ம் தேதி முருகன் கோவில்களில் தைப்பூச விழா நடை பெறுகிறது.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான முருக பக்தர்கள் பழனிக்கு பாத யாத்திரை சென்று வருகின்றனர்.
பல்லடத்திலிருந்து தாராபுரம் வழியாக பழனி பாதயாத்திரை செல்வோர், தாராபுரம் ஆறு ரோடு வழிச்சாலையை பயன்படுத்துகின்றனர்.தற்போது ஆறுவழிச்சாலையில் பணிகள் நடந்து வருவதால், பாத யாத்திரை செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள், ரோட்டில் செல்ல வேண்டியுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எனவே, பாதயாத்திரை செல்லும் ஐந்து நாட்களுக்கு மட்டும், அனைத்து வாகனங்களையும் அவிநாசி பாளையம் வழியாக திருப்பி விடவேண்டும். இல்லையெனில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. பல்லடத்திலிருந்து குண்டடம் வரை, ரோட்டின் இருபுறமும் முட்கள், பாட்டில்கள் அதிகம் உள்ளன. அவற்றை சுத்தப்படுத்த வேண்டும்.
தைப்பூசத்தை முன்னிட்டு பாதயாத்திரை செல்லும்பக்தர்கள் வசதிக்காக, கூடுதல் கழிப்பிட வசதி, குடிநீர், தெருவிளக்கு, மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.