உள்ளூர் செய்திகள் (District)

குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க 2-வது நாளாக தடை

Published On 2024-07-29 05:58 GMT   |   Update On 2024-07-29 05:58 GMT
  • அருவிகளில் தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது.
  • குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் நேற்று காலை முதல் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் உள்ள முக்கிய அருவிகளான மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று மாலையில் தண்ணீர் வரத்து படிப்படியாக அதிகரித்தது.

ஒருகட்டத்தில் கடுமை யான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. ஐந்தருவியில் 5 கிளைகளும் ஒருசேர காட்சியளிக்கும் அளவு தண்ணீர் காட்டாற்று வெள்ளம்போல் விழுந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.

இதனால் நேற்று விடு முறை நாளில் குடும்பத்துடன் குளிக்க வந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயினருவிகளில் வெள்ளப்பெருக்கை தூரத்தில் நின்று பார்த்து ரசித்துவிட்டு சென்றனர். தொடர்ந்து இரவு முழுவதும் மலைப்பகுதியில் மழை பெய்தவண்ணம் இருந்ததால் வெள்ளப்பெருக்கு குறைய வில்லை.

இந்நிலையில் இன்று காலையில் மலைப்பகுதியில் சாரல் மழை சற்று குறைந்துள்ளது. இதன் காரணமாக பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவில் சற்று தண்ணீர் குறைய தொடங்கியுள்ளது. இருப்பினும் குளிப்பதற்கு தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் மெயினருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுந்து வருகிறது. எனவே அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு இன்று 2-வது நாளாக தடை நீடிக்கிறது.

அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவு சீராகும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் உடனடியாக குளிக்க அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News