உள்ளூர் செய்திகள்

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை

Published On 2024-08-04 06:00 GMT   |   Update On 2024-08-04 06:00 GMT
  • தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.
  • தடுப்புகள் அமைத்து கண்காணிக்கும் போலீசார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணை பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அணையாகும். சுமார் 15 அடி உயரத்தில் இருந்து 300 மீட்டர் நீளத்திற்கு அருவி போல் தண்ணீர் கொட்டுகிறது.

இந்த தடுப்பணையில் கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் கோபி, சத்தி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள்.

அதேபோல் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் திருப்பூர், கோவை, கரூர், சேலம், நாமக்கல் உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் வரு கிறார்கள்.

பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக குளிக்க முடியும் என்பதாலும் அரசு விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கொடிவேரி அணைக்கு வருவது வழக்கம்.

இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பவானி சாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதனால் நீர்வரத்து அதிகரித்து பவானிசாகர் அணை நிரம்பும் நிலையில் உள்ளது. இதனால் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளது.

மேலும் பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் பாசனத்துக்கு 1500 கன அடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டு உள்ளது.

இதனால் கோபிசெட்டி பாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணையில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது. மேலும் நீர்வரத்து அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில் விடு முறை நாட்களில் மக்கள் அதிகளவில் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை யொட்டி பாதுகாப்பு கருதி கொடிவேரி தடுப்பணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கொடிவேரி தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது.

மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு அங்கு தடைக்கான அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. போலீசார் மற்றும் அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் பலர் கொடிவேரிக்கு வந்து இருந்தனர். அவர்களை போலீசார் தடுத்தி நிறுத்தி நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் கொடிவேரியில் மக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

மேலும் இது பற்றி தெரியாமல் பல்வேறு பகதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கார், வேன், இரு சக்கர வாகனங்களிலும் வந்திருந்தனர். கொடிவேரியில் தடை விதிக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதை தொடர்ந்து அந்த பகுதியில் போலீசார் தொடர்ந்து கண்காணித்து மக்கள் அணைக்கு செல்லாத வகையில் பாதுகாப்பு பணயில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Tags:    

Similar News