திருவண்ணாமலையில் அரோகரா கோஷம் முழங்க பெரிய தேர் வெள்ளோட்டம்
- தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
- 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
வேங்கிக்கால்:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா அடுத்த மாதம் 13-ந்தேதி மகாதீபம் ஏற்றப்படுகிறது.
கார்த்திகை தீபத்திருவிழா 7-ம் நாள் உற்சவத்தில் தேரோட்டம் நடைபெறும். 5 தேர்கள் வலம் வருவது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் 10-ந்தேதி நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பெரிய தேர் என்று அழைக்கப்படும் அண்ணாமலையார் தேர் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. இந்த பணிகள் முழுமையாக முடிவுற்ற நிலையில் இன்று காலை வெள்ளோட்டம் நடந்தது.
காலை 8.14 மணிக்கு பெரிய தேரை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வடம்பிடித்து தொடங்கி வைத்தார்.
கலெக்டர் பாஸ்கர பாண்டியன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், கோவில் இணை ஆணையர் சி.ஜோதி, அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம், முன்னாள் நகர மன்ற தலைவர் இரா.ஸ்ரீதரன், மாநகராட்சி ஆணையாளர் காந்திராஜ், அ.தி.மு.க. எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் டிஸ்கோ குணசேகரன், நகர செயலாளர் ஜெ.செல்வம், ரேடியோ ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமலை அம்மனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷம் எதிரொலிக்க தேர் அசைந்தாடியபடி மாடவீதியில் வலம் வந்தது.
தேர் வெள்ளோட்டத்தை முன்னிட்டு 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
தேருக்கு முன்பாக பரத நாட்டிய கலைஞர்கள் பரதநாட்டியம் ஆடியபடி வந்தனர். தேரோட்டத்தில் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்துகொண்டனர்.