அரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமையும்-எல்.முருகன்
- தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் பா.ஜ.க. தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உறுப்பினர் சேர்க்கை பணிகளை தொடங்கி வைப்பதற்காக மத்திய மந்திரி எல்.முருகன் இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்தார்.
தொடர்ந்து அங்கிருந்து கார் மூலம் நெல்லை வண்ணார்பேட்டை அரசு சுற்றுலா மாளிகைக்கு வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் மெரினா கடற்கரையில் நேற்று விமான சாகச நிகழ்ச்சியை காண வந்தவர்களில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகவும் வருந்தத்தக்க சம்பவம்.
விமானப்படை அதிகாரிகள் தமிழக அரசிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். அதற்கேற்றார் போல் தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதனை எடுக்க தமிழக அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் டாஸ்மாக் எண்ணிக்கை, மனமகிழ் மன்றத்தை அதிகரித்துள்ளனர். ஒவ்வொரு பள்ளிகளிலும் போதைப் பொருட்கள் அதிகரிக்கிறது. இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள், பெற்றோருக்கு கவலையாக உள்ளது.
தி.மு.க.வை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ரூ.3000 கோடி போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவரையும் கைது செய்து அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக போலீஸ் இன்னும் வேகமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளுநர் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.
வி.சி.க.வின் மதுவிலக்கு மாநாடு என்பது மிகப்பெரிய நாடகம். அது திருமாவளவன், முதல்-அமைச்சர் இணைந்து அரங்கேற்றிய நாடகம் தான். வெளிநாடு சென்று உரிய முதலீடுகளை கொண்டு வராததால் முதல்-அமைச்சர், திருமாவும் இந்த நாடகத்தை அரங்கேற்றியுள்ளனர்.
கனிமொழி டுவிட்டர் பதிவில் சமாளிக்க முடியாத கூட்டத்தை தவிர்த்து இருக்கலாம் என்ற கருத்து கூறியுள்ளார். தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் சொல்லியிருக்கிறார்.
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கி அரியானாவில் மீண்டும் ஆட்சி அமைப்போம். மக்கள் சுதந்திரமாக நடமாடு கிறார்கள். சுதந்திரமாக வாக்களித்துள்ளனர்.
வால்மீகி என்ற ஒரு பிரிவை சேர்ந்த மக்கள் முதன் முறையாக 70 ஆண்டுக்கு பிறகு வாக்களித்துள்ளனர். அந்த பகுதியில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.