உள்ளூர் செய்திகள்

தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் தி.மு.க. விலை கொடுக்க வேண்டி வரும் - அண்ணாமலை

Published On 2023-10-21 07:18 GMT   |   Update On 2023-10-21 07:40 GMT
  • தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் நேற்று அகற்றினர்.
  • பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்தார்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இல்லம் அருகே இருந்த கொடிக்கம்பத்தை போலீசார் நேற்று அகற்றினர். இதனை அகற்றும்போது பா.ஜ.க.வினர் மற்றும் போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பனையூரில் பா.ஜ.க. கொடிக்கம்பத்தை அகற்றிய தி.மு.க. அரசுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று தனது வலைதள பக்கத்தில் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் இடங்களில் பா.ஜ.க. கொடிக்கம்பம் நடப்படும் என குறிப்பிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

பனையூரில் கிளை தலைவர் ஏற்பாட்டில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பத்தை அகற்ற தீவிரவாதிகளை கைது செய்யப்படுவது போல நள்ளிரவில் பெரும் போலீஸ் படையுடன் புறப்பட்டு வந்தது.

தி.மு.க. அரசின் உத்தரவின் பேரில் நள்ளிரவில் கொடிக்கம்பத்தை அகற்ற வந்த போலீசாரை எதிர்த்து போராடிய சகோதர, சகோதரிகள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்கு தலை நடத்தி இருக்கிறார்கள்.

எங்கள் தொண்டர்கள் சிந்திய ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் தி.மு.க. பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். தமிழக பா.ஜ.க.வின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்து கொள்ள வேண்டாம். நவம்பர் 1-ம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பா.ஜ.க. கொடிக்கம்பங்கள் நடப்படும்.

10 ஆயிரமாவது கொடிக் கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 8-ம் தேதி (100-வது நாள்) காவல் துறையினரின் தடியடியால் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடிக்கம்பம் அகற்றப்பட்ட அதே இடத்தில் நடப்படும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News