திருச்சியில் தடையை மீறி ஊர்வலம்- பா.ஜ.க. நிர்வாகிகள் 2 பேர் கைது
- பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
- பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
திருச்சி:
சுதந்திர தின விழாவை 3 நாட்கள் நாடு முழுவதும் கொண்டாட பா.ஜ.க. திட்டமிட்டது. அதன்படி திருச்சி மாநகரில் பா.ஜ.க. இளைஞரணி சார்பில் மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி மேஜர் சரவணன் நினைவு சதுக்கத்தில் இருந்து வடகனேரியில் உள்ள சுதந்திர போராட்ட தியாகி வ.வே.சு. ஐயர் வீடு வரை ஊர்வலம் செல்ல ஏற்பாடுகள் நடைபெற்றன.
இதற்கு காவல்துறை அனுமதி மறுத்தது. இந்த நிலையில் தடையை மீறி பா.ஜ.க.வினர் ஊர்வலம் நடத்தினர். திருச்சி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து மாநில இளைஞரணி செயலாளர் ரமேஷ் சிவா, மாவட்டத் தலைவர் ராஜசேகரன், மாநில பொதுச் செயலாளர் கவுதம நாகராஜன் உள்ளிட்டோர் புறப்பட்டு அரசு மருத்துவமனை, எம்.ஜி.ஆர். சிலை வழியாக சென்று மீண்டும் கட்சி அலுவலகம் திரும்பினர்.
முன்னதாக போலீசார் மேஜர் சரவணன் நினைவு சதுக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். ஆனால் பா.ஜ.க.வினர் மாற்று வழியை தேர்வு செய்து ஊர்வலத்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து பா.ஜ.க.வைச் சேர்ந்த தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்டத் தலைவர் சரவணன், பீம நகர் மண்டல் செயலாளர் மணிகண்டன் ஆகிய 2 நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதை அறிந்த பா.ஜ.க.வினர் போலீஸ் நிலையம் முன்பு திரண்டனர்.
பின்னர் நிர்வாகிகள் கைது கண்டித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்தனர். இதை தொடர்ந்து கைதான 2 பேரும் நேற்று இரவு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.