உள்ளூர் செய்திகள்

கே.பாலகிருஷ்ணன்,பழனிவேல் தியாகராஜன்

தமிழக நிதியமைச்சர் கார் மீது பாஜகவினர் செருப்பு வீச்சு- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்

Published On 2022-08-13 15:22 GMT   |   Update On 2022-08-13 15:22 GMT
  • திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
  • வன்முறை கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

தாக்குதல் நடந்த வீடியோக்களை பார்க்கும்போது எதுவுமே உணர்ச்சிவயப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.

அதுவும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, கொடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

அதிகார வெறியோடு கிடைப்பதில் எல்லாம் அரசியல் செய்யும் பாஜகவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செய்வதில் கூட தங்கள் அரசியல் லாபத்தை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

இதுவரை தாக்குதல் நடத்திய கும்பலை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக, வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சமூக ஊடகப் பதிவுகளையே செய்து வருகிறார்கள்.

எனவே, தமிழ்நாடு காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

பாஜகவினரின் அரசியல் நாகரீகமற்ற இந்த அராஜகமான வன்முறைச் செயலை பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News