உள்ளூர் செய்திகள் (District)

கோத்தகிரி அருகே குடியிருப்பு பகுதியில் நடமாடும் கருஞ்சிறுத்தை: பொதுமக்கள் பீதி

Published On 2024-09-26 04:20 GMT   |   Update On 2024-09-26 04:20 GMT
  • சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
  • கருஞ்சிறுத்தை உலா வரும் காட்சிகள் கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப காலமாக சிறுத்தைகள் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் மிளிதேன் பகுதியில் கடந்த 2 நாட்களாக கருஞ்சிறுத்தை ஒன்று உலா வரும் காட்சிகள் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு காமிராக்களில் பதிவாகி உள்ளன.

குடியிருப்பு பகுதிக்குள் சர்வசாதாரணமாக அந்த கருஞ்சிறுத்தை நடமாடுகிறது. சிறுத்தை, வளர்ப்பு நாயை வேட்டையாட வீட்டின் கேட்டை தாண்டி உள்ளே நுழைந்து பின்பு வெளியே செல்லும் காட்சிகளும், சாலையில் அமர்ந்து நோட்டமிடும் காட்சிகளும் காமிராவில் பதிவாகி தற்போது அவை வலைதளங்களில் பரவி வருகின்றன.

கருஞ்சிறுத்தை நடமாட்டத்தால் மிளிதேன் பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே வராமல் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறுகையில் மாலை நேரங்களில் குழந்தைகளை டியூசனுக்கு அனுப்ப முடியவில்லை. குழந்தைகளை வெளியில் அனுப்பினால் சிறுத்தை தாக்கி விடுமோ என்ற அச்சத்தில் உள்ளோம்.

எனவே வனத்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து குடியிருப்பு பகுதிக்குள் நடமாடும் கருஞ்சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News