உள்ளூர் செய்திகள்

பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி: `செல்பி' எடுக்க குவியும் சுற்றுலாப் பயணிகள்

Published On 2024-08-25 06:03 GMT   |   Update On 2024-08-25 06:03 GMT
  • 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.
  • கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை, சுந்தர பாண்டியபுரம், ஆய்க்குடி உள்ளிட்ட பகுதிகளில் ஆண்டு தோறும் ஜூலை முதல் ஆகஸ்ட் மாதம் வரை 3 மாத காலங்கள் சூரியகாந்தி பூக்கள் பயிரிடப்படுவது வழக்கம்.

அந்த வகையில், இந்த ஆண்டும் தற்போது சூரியகாந்தி சாகுபடி சுந்தர பாண்டியபுரம், சாம்பவர் வடகரை உள்ளிட்ட பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ளது.

தற்போது அவை அனைத்தும் அறுவடைக்கு தயாரான நிலையில், செழித்து வளர்ந்துள்ள அந்த சூரியகாந்தி பூவின் அழகு அந்த பகுதியில் கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

ஏற்கனவே கடந்த சில வருடங்களாக குற்றாலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் இந்த பூக்களின் அழகை ரசிப்பதற்காக கார்களில் குடும்பத்துடன் தென்காசியில் இருந்து ஆய்க்குடி வழியாக சுரண்டை செல்லும் சாலையில் வந்து சூரியகாந்தி தோட்டத்திற்கு படையெடுப்பார்கள்.

தொடர்ந்து கண்களை கவரும் சூரியகாந்திக்கு நடுவில் நின்று செல்பி எடுத்து மகிழ்வார்கள்.

இதனால் குற்றாலம் சீசன் காலத்தில் இந்த பகுதிகளும் சுற்றுலாத் தலமாக மாறிவிடும். அதன்படி இந்த ஆண்டும் சூரியகாந்தி பூக்கள் கம்பளி, சாம்பவர் வடகரை, சுந்தரபாண்டியபுரம் உள்ளிட்ட கிராமங்களில் பூத்துக்குலுங்க தொடங்கி உள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.

உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் குடும்பம் குடும்பமாக கார்களில் வந்து தங்கள் குழந்தைகளுடன் பூத்துக் குலுங்கும் சூரியகாந்தி பூக்களுக்கு இடையில் நின்று உற்சாகமாக புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.

கேரளாவில் திருமணமான புதுமண தம்பதிகள் பல்வேறு ரக ஆடைகளை அணிந்து கொண்டு சூரியகாந்தி மலர் இருக்கும் பகுதியை சுற்றிலும் போட்டோ சூட் நடத்தி வருகின்றனர். இதனால் வயல் வெளியில் உள்ள சாலைகளின் ஓரத்தில் வியாபாரிகள், விவசாயிகள் தற்காலிக கடைகள் அமைத்துள்ளனர்.

Tags:    

Similar News