செங்கல்பட்டு மாவட்டத்தில் 13-ந்தேதி படகுகள் ஆய்வு செய்யப்படும்: கலெக்டர் தகவல்
- படகிலுள்ள பழுதுகள் நீக்கி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
- ஆய்வுப்பணி 13.6.2023 அன்று காலை 7 மணிக்கு தொடங்கப்படும்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உதவி இயக்குநர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை காஞ்சீபுரம் (இருப்பு) நீலாங்கரை அலுவலக கட்டுப்பாட்டிலுள்ள செங்கல்பட்டு மாவட்ட மீனவ கிராமங்களில் வருகிற 13-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று காலை 7 மணியளவில் எந்திரம் பொருத்தப்பட்ட மற்றும் எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகள் ஆய்வு நடைபெறவுள்ளது.
செங்கல்பட்டு மாவட்ட கடல் மீன்பிடி படகு உரிமையாளர்கள் மேற்கொள்ள வேண்டிய ஆய்வுக்காக முன்னேற்பாடு பணிகள்:
ஆய்வு செய்யப்படவுள்ள படகுகளின் பதிவுச்சான்று, வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய், பாஸ் புத்தக நகல் மற்றும் ஆதார் அட்டை நகல்களை ஆய்வு குழுவினரிடம் அளிக்க வேண்டும்.
மீன்வளத்துறையின் மூலம் வழங்கப்பட்ட தொலைத்தொடர்பு தகவல் சாதனங்கள் மற்றும் உயிர்காக்கும் கருவிகள் போன்றவற்றை உடன் வைத்திடுமாறும் ஆய்வு செய்யும் நாளில் ஆய்வுக்குழுவுக்கு அனைத்து விவரங்களையும் அளித்திடவும் அனைத்து படகு உரிமையாளர்கள் அளிக்கப்பட வேண்டும். எந்திரம் பொருத்தப்பட்ட நாட்டுப்படகுகளில் வெளிப்பொருந்தும் எந்திரங்களின் படகில் பொருத்தியிருக்க வேண்டும்.
பதிவு செய்யப்பட்டஎந்திரம் பொருத்தப்பட்ட எந்திரம் பொருத்தப்படாத நாட்டுப்படகுகளில் பதிவு எண் தெளிவாக எழுதியிருக்க வேண்டும். (ஸ்டிக்கர்) கண்டிப்பாக ஒட்டியிருக்க கூடாது.
படகிலுள்ள பழுதுகள் நீக்கி இயங்கும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
ஆய்வின்போது காண்பிக்கப்படாத படகுகள் மற்றும் பழுதுள்ள படகுகளின் விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் நிறுத்தம் செய்யப்படுவதுடன், அந்த படகுகள் இயக்கத்தில் இல்லாததாக கருதி அந்த படகுகளின் பதிவுச்சான்று உரிய விசாரணைக்கு பிறகு ரத்து செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
ஆய்வு நாளன்று படகை ஆய்வுக்கு உட்படுத்தாமல் பின்னொரு நாளில் ஆய்வு செய்ய கோரும் படகு உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்க படமாட்டாது. நாட்டுப்படகு ஆய்வு செய்யப்படவுள்ள நாளில் படகு உரிமையாளர் அல்லது அவரது அதிகாரம் பெற்ற ஒரு நபர் படகை காண்பிக்க வேண்டும்.
ஆய்வுப்பணி 13.6.2023 அன்று காலை 7 மணிக்கு தொடங்கப்படும். மீனவர்கள் ஆய்வு நடைபெறவுள்ள காரணத்தினால் 12.6.2023 இரவு முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது படகுகள் பதிவுச்சான்றில் உள்ள தங்குதளத்தில் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.