உள்ளூர் செய்திகள்

சென்னை போலீசை கலங்கடித்த வெடிகுண்டு மிரட்டல்- கடற்கரை பகுதிகளில் அதிரடி சோதனை

Published On 2023-12-28 10:01 GMT   |   Update On 2023-12-28 10:01 GMT
  • பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
  • டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர்.

சென்னை:

சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தமிழக டி.ஜி.பி. அலுவலகத்திற்கு நேற்று மாலை மர்ம நபர்கள் மூலம் மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் சென்னையில் 30 இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும் என குறிப்பிட்டிருந்தது. குறிப்பாக பொது மக்கள் அதிகம் கூடும் இடமான எலியட்ஸ் கடற்கரை மெரினா கடற்கரை உள்ளிட்ட இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கப் போவதாக கூறப்பட்டு இருந்தது.

இதையடுத்து சென்னையில் உள்ள காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பப்பட்டு அந்தந்த காவல் நிலைய எல்லைக்குள் காவலர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

அதேபோல் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மெரினா கடற்கரை, சென்ட்ரல் ரெயில் நிலையம், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

மேலும் பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் உள்ள நினைவுச் சின்னம் அருகே டிபன் பாக்ஸ் வடிவில் மர்ம பொருளை கண்டெடுத்தனர். அதில் வெடிகுண்டு இருக்கிறதா என்பது குறித்து மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டு பிடிக்கும் கருவிகளைக் கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். விடிய விடிய இந்த சோதனை நடந்தது.

பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புடன் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் கடற்கரை முழுவதும் சோதனை நடத்தினர். மர்ம பொருள் வெடிகுண்டு இல்லை என்பது உறுதியானது.

மேலும் டி.ஜி.பி. அலுவலகத்தில் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில் எலியட்ஸ் கடற்கரை தவிர மற்ற 29 இடங்களில் உள்ள வெடிகுண்டுகளை தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் 2500 பிட்காயின் அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

100-க்கும் மேற்பட்டோர் சோதனையில் ஈடுபட்டும் எந்த வெடி பொருளும் சிக்காததால் காவல் துறையினர் சோதனையை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். இருப்பினும் சென்னை போலீசாரை வெடிகுண்டு மிரட்டல் கலங்கடித்துவிட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News