உள்ளூர் செய்திகள்

கோவை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

Published On 2024-06-24 04:35 GMT   |   Update On 2024-06-24 04:35 GMT
  • கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
  • வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

கோவை:

கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கு, துபாய், சிங்கப்பூர், உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் தினமும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதனால் கோவை விமான நிலையம் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும். இன்று காலையும் விமான நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் வந்திருந்தனர்.

அவர்களை வழி அனுப்பி வைக்கவும், ஊர்களில் இருந்து வருபவர்களை வரவேற்கவும் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் விமான நிலையம் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது. விமானநிலைய ஊழியர்களும் தங்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இன்று காலை 7.30 மணிக்கு விமான நிலையத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு வெடிகுண்டு மிரட்டல் செய்தி வந்திருந்தது. அதில் விமான நிலையத்தின் குளியலறை தண்ணீர் குழாயில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது. இதனால் விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து கோவை பீளமேடு போலீசார் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸ்சாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு பிரிவு போலீசாரும் மோப்ப நாய்களுடன் விமான நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் விமான நிலையம் முழுவதும் மெட்டல் டிடெக்டர் கருவி மற்றும் மோப்பநாய் உதவியுடன் சல்லடை போட்டு சோதனை நடத்தினர்.

குளியலறை மற்றும் கழிப்பிடங்களிலும் சோதனை நடைபெற்றது. ஆனாலும் எந்த பொருளும் சிக்கவில்லை. இதனால் வெடி குண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மிரட்டல் எங்கிருந்து வந்தது. எந்த மின்னஞ்சல் முகவரியில் வந்தது. மின்னஞ்சல் அனுப்பிய நபர் யார்? என்பதை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கோவை விமான நிலையத்திற்கு 2முறை வெடிகுண்டு மெட்டல் வந்தது. தற்போது 3-வது முறையாகவும் மிரட்டல் வந்துள்ளது.

இதற்கிடையே கோவை விமான நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது உடமைகளும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றன.

வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News