மாணவனின் நசுங்கிய இரு கால்களும் துண்டித்து அகற்றம்- சென்னை மாணவர்கள் இனியாவது திருந்துவார்களா?
- தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
- தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.
பூந்தமல்லி:
படியில் பயணம் நொடியில் மரணம் என்று அரசு பஸ்களில் எழுதி போட்டிருந்தாலும் படியில் பயணம் செய்வதே சாகச பயணம் என்பது போய் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கிய படி பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.
அதிலும் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் பிடித்து கொண்டு சாகசம் செய்வது போல் பயணிப்பதை பார்ப்பவர்களே பதற்றப்படுகிறார்கள். கீழே விழுந்தால் என்ன நிலைமை என்று ஒவ்வொருவரும் ஆதங்கப்படுகிறார்கள்.
ஆனால் மாணவர்களோ எதையும் காதில் வாங்குவதில்லை. தங்கள் சாகச பயணத்தை தினமும் படிக்கட்டுகளில் நிகழ்த்தி வருகிறார்கள்.
குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் (16), பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் அவனது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் இரண்டு கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். எவ்வளவு அறிவுரை கூறினாலும், அதனை காதில் வாங்காததன் விளைவாக தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
நேற்று வரை துள்ளித் திரிந்த மாணவன் இன்று தனது இரு கால்களையும் பறிகொடுத்து முடமாகி இருக்கிறான். அவனது எதிர்காலமே இருண்ட காலமாக மாறியிருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து அல்ல. தானாக விலை கொடுத்து வாங்கிய விபத்து.
இந்த மாணவரை போல் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்.