செஞ்சியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 15 பேர் படுகாயம்
- செஞ்சியில் பஸ்கள் நேருக்கு நேர் மோதியதில் 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
- தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது.
விழுப்புரம்:
புதுவையில் இருந்து பெங்களூருக்கு நேற்று இரவு கர்நாடகா அரசு பஸ் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலை யிலிருந்து சென்னைக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று செஞ்சி வழியாக பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த 2 பஸ்களும் செஞ்சிநகரம் திண்டிவனம் சாலையில் பி.எஸ்என்.எல்அலுவலகம் எதிரே வரும்போது ஒன்றுக்கு ஒன்று நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இதில் தனியார் பஸ் கர்நாடகா பஸ் மீது மோதி இடது பக்கம் திரும்பி அருகில் உள்ள போர்வெல் கடை மீது மோதி நின்றது. இதனால் கடையின் முன் பகுதி சேதம் அடைந்தது.
இந்த விபத்தில் 2 பஸ்களில் பயணம் செய்த நரசிங்கராயன் பேட்டையை சேர்ந்த கலீல் அகமத் (வயது 25) பெங்களூர் கர்நாடகா பஸ் டிரைவர் ஓம் சரவணபவன் (51), திருவண்ணாமலையை சேர்ந்த சுரேஷ் (32) தேவனூரை சேர்ந்த கங்காதரன் (22), விஜி, அர்ஜுனன், ராஜேஷ் குமார், சசிகாந்தன் அயோத்தி உத்திரகுமார், கெங்கைஅம்மாள் உள்பட 15 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக செஞ்சி , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.