உள்ளூர் செய்திகள்

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் மென்பொருள் மூலம் வேட்பாளரின் வெற்றியை மாற்ற முடியும்- என்ஜினீயர் சொல்கிறார்

Published On 2023-04-13 03:35 GMT   |   Update On 2023-04-13 03:35 GMT
  • மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் அதிக வாக்குகளை பெற வைக்க முடியும்.
  • மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை வேறொரு வேட்பாளர் பெற்று இருந்தாலும், அவர் குறைவான வாக்குகள் பெற்றதாகவே காட்டும்.

சென்னை:

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் குளறுபடிகள் நடப்பதாக அரசியல் கட்சிகள் புகார்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரையை சேர்ந்த என்ஜினீயர் கண்ணன் என்பவர், மின்னணு வாக்குப்பதிவு கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்து, வேட்பாளரின் வெற்றியை மாற்ற முடியும் என்று கூறுகிறார். இதனை அவர் மாதிரி எந்திரம் மூலம் செய்தும் காண்பித்தார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று அவர் மாதிரி வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்குப்பதிவு செய்து, அதில் எந்த வேட்பாளரை வெற்றி பெற வைக்க வேண்டுமோ? அவரை வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற வைக்கிறார். இது குறித்து என்ஜினீயர் கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மின்னணு வாக்குப்பதிவு மற்றும் கட்டுப்பாட்டு எந்திரத்தில் மென்பொருளை பதிவேற்றம் செய்வதன் மூலம் குறிப்பிட்ட வேட்பாளரின் சின்னத்தில் அதிக வாக்குகளை பெற வைக்க முடியும். இதன் மூலம் மக்களிடம் இருந்து அதிக வாக்குகளை வேறொரு வேட்பாளர் பெற்று இருந்தாலும், அவர் குறைவான வாக்குகள் பெற்றதாகவே காட்டும். ஆனால் இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவுக்கு மென்பொருளை உருவாக்கலாம்.

இதை தடுக்க ஒப்புகைச் சீட்டு எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளை பிரித்து எண்ணுவதை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்காகவும் நான் மெஷின் தயாரித்து இருக்கிறேன். இதுபற்றி தேர்தல் ஆணையத்திடமும் எடுத்துரைத்திருக்கிறேன். ஆனால் அவர்கள் இப்போது அதற்கு வாய்ப்பு இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News