நெல்லையில் துப்பாக்கி சிக்கிய வழக்கு: சென்னை ஐ.டி. ஊழியரிடம் விசாரணை
- சி.சிடி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார்.
- ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது.
நெல்லை:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சென்னையில் இருந்து தினந்தோறும் நெல்லைக்கு அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி படுக்கை வசதி கொண்ட அரசு விரைவு சொகுசு பஸ் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு நேற்று மதியம் நெல்லைக்கு வந்தது.
நெல்லை புதிய பஸ்நிலை யத்தில் பயணிகளை இறக்கிவிட்டு வண்ணார்பேட்டையில் உள்ள பணிமனைக்கு பஸ் வந்தது. அதன் பின்னர் சிறிது நேரம் கழித்து வழக்கம் போல் பஸ்சை ஊழியர்கள் சுத்தம் செய்தனர். அப்போது அந்த பஸ்சில் 9-வது எண் படுக்கைக்கு கீழ் ஒரு துப்பாக்கியும், சுமார் 2½ அடி நீளம் கொண்ட ஒரு அரிவாளும் கிடந்தது.
இதுகுறித்து பணிமனை மேலாளர் கண்ணன் பாளை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜூலியட், சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பணிமனைக்கு விரைந்து வந்து அரிவாள் மற்றும் துப்பாக்கியை கைப்பற்றினர்.
மேலும் அந்த பஸ்சில் வேறு ஏதும் ஆயுதங்கள் இருக்கிறதா? என்று பஸ் முழுவதையும் சோதனை செய்தனர். பின்னர் அவர்கள் அரிவாள், துப்பாக்கியை போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து பணிமனை மேலாளர் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இந்திய தண்டனை சட்டம் 102 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து பஸ்சில் வந்தவர்கள், அந்த இருக்கையில் பயணித்த நபர் யார் என்பது குறித்த விபரங்களை போலீசார் சேகரித்தனர்.
அப்போது அந்த இருக்கையில் பயணித்தவர் கோவில்பட்டியில் இறங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த நபர் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்ததால் பெயர் மட்டுமே இருந்தது. அவரது முகவரி இல்லை.
இதையடுத்து தனிப்படை போலீசார் கோவில்பட்டிக்கு விரைந்தனர். அங்கு வழக்கமாக அரசு விரைவு பஸ்கள் நின்று செல்லும் பகுதியில் பொருத்தப் பட்டுள்ள சி.சிடி.வி. காமிரா பதிவுகளை ஆய்வு செய்த போலீசார் அந்த நபர் கோவில்பட்டியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடித்தனர்.
தொடர்ந்து அந்த நபரை பிடித்து விசாரித்தபோது, அவர் சென்னையில் ஒரு ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் வாலிபர் என்பது தெரியவந்தது. அவரிடம் விசாரித்தபோது, தனது பாட்டியின் இறப்பு நிகழ்விற்கு சென்னையில் இருந்து விடுப்பு எடுத்து வந்ததாகவும், படுக்கைக்கு கீழ் ஆயுதங்கள் இருந்த விஷயமே போலீசார் தன்னை விசாரிக்கும்போது தான் தெரியும் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அவரை இன்று பாளை போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க போலீசார் உத்தர விட்டுள்ளனர். அங்கு வைத்து துணை கமிஷனர் ஆதர்ஷ் பசேரா தலைமையில் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அந்த வாலிபர் கூறுவது உண்மையெனில், இந்த ஆயுதங்களை வேறு யார் பதுக்கி வைத்திருந்தார்கள்? என்பதை அறியும் கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.