தூத்துக்குடியில் லாரியில் ரூ.5 லட்சம் பயோ டீசல் கடத்திய 2 வாலிபர்கள் கைது
- லாரியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
- போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் மற்றும் சிப்காட் போலீசார் இணைந்து தூத்துக்குடி மாநகரில் 3-வது மைல் பகுதியில் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அப்போது லாரியின் டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய 2 பேரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியின் பின்புறம் இருந்த சரக்கை சோதனை செய்தனர். அதில் பேரல்களில் பயோ டீசல் கடத்தப்பட்டு கொண்டு செல்லப்படுவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அந்த டீசலுடன் லாரியை தென்பாகம் போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கொண்டு சென்றனர்.
லாரியில் இருந்த 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். அதில் லாரியை ஓட்டிய டிரைவர், தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள கணக்க நாடார்பட்டி மேல அரியபுரத்தை சேர்ந்த லெட்சுமணன் என்பவரது மகன் சங்கர் (வயது 25) என்பதும், கிளீனர் கடையம் அருகே பால்வண்ணநாதபுரம் வடக்கு தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது மகன் தவமணி (24) என்பதும் தெரியவந்தது.
மேலும் தவமணி டிப்ளமோ படித்துவிட்டு லேப்டாப் சர்வீஸ் செய்யும் பணி செய்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் லாரியில் சுமார் 48 பேரல்களில் 9 ஆயிரம் லிட்டர் பயோ டீசல் கடத்தி கொண்டு வந்தது விசாரணையில் கண்டு பிடிக்கப்பட்டது.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட 2 பேரையும் அவர்களிடம் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பயோ டீசல் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது.