- நடையனூர் பகுதியில் செல்போன் கோபுரம் அமைக்க பொது மக்கள் எதிர்ப்பு
- வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்
வேலாயுதம்பாளையம்
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் உள்ள நடையனூர் அருகே இளங்கோ நகர் பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிப்பவர்கள் விவசாயத்தை நம்பி குடும்பம் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் மத்தியில் அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமான இடத்தில் தனியாருக்கு சொந்தமான செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டு வருகிறது .இந்த கோபுரம் அமைப்பதனால் இந்த கோபுரத்தில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சினால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் கதிர்வீச்சினால் விவசாய நிலமும் பாதிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது என்று கூறி செல்போன் கோபுரம் அமைக்க கூடாது என மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் செல்போன் கோபுரம் அமைப்பதை நிறுத்த வேண்டும் எனக்கூறி வேலாயுதம்பாளையம்- நொய்யல் செல்லும் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் சாலை மறியலை கைவிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதன் காரணமாக சுமார் 30 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .