மாணவர் விடுதிக்குள் புகுந்து 23 செல்போன்கள்-சான்றிதழ்கள் திருட்டு
- செல்போன் காணாமல் போன சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
- மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை:
நெல்லை புதிய பஸ் நிலையத்தை ஒட்டி ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி செயல்பட்டு வருகிறது.
இந்த விடுதி வளாகத்தில் ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்கள், கல்லூரி இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு என தனித்தனி கட்டிடங்களில் விடுதிகள் செயல்பட்டு வருகிறது.
இந்த 2 விடுதிகளிலும் சேர்த்து சுமார் 220 மாணவர்கள் தங்கி இருந்து நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று விடுமுறையையொட்டி விடுதியில் உள்ள மாணவர்கள் தங்களது செல்போன்கைளை பயன்படுத்தி வந்துள்ளனர்.
பின்னர் இரவில் செல்போன்களை வழக்கமாக சார்ஜ் செய்யும் இடங்களில் வைத்துவிட்டு தூங்கி உள்ளனர். மேலும் ஒரு சிலர் தங்களது தலை பகுதிக்கு அருகே செல்போன்களை வைத்து தூங்கி உள்ளனர்.
நள்ளிரவில் மாணவர்கள் விடுதியில் உள்ள பின்பக்க காம்பவுண்டு சுவரை தாண்டி விடுதிக்குள் மர்ம நபர்கள் நுழைந்துள்ளனர். அந்த நபர்கள் 2 விடுதி கட்டிடங்களிலும் இருந்து மாணவர்களின் 23 செல்போன்கள் மற்றும் அவர்களது சில சான்றிதழ்களை எடுத்துக் கொண்டு தப்பி சென்றுள்ளனர்.
இன்று காலை மாணவர்கள் எழுந்து செல்போனை தேடிய போது அவை காணாமல் போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து செல்போன் காணாமல் போன சம்பவம் குறித்து விடுதி காப்பாளரிடம் தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசார், விடுதியின் உட்புறமும், வெளிபுறமும் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இதுகுறித்து விடுதி பொறுப்பாளரான நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் மூலமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
உள்ளூர் மற்றும் வெளியூர் பஸ்கள் வந்து செல்வதால் 24 மணி நேரமும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் புதிய பஸ் நிலையத்தின் அருகே உள்ள மாணவர் விடுதியில் மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.