உள்ளூர் செய்திகள்

சென்னை உள்பட 6 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு- துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

Published On 2022-11-21 02:42 GMT   |   Update On 2022-11-21 05:23 GMT
  • தமிழக-புதுச்சேரி கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும்.
  • மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை.

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று சென்னையில் இருந்து சுமார் 670 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது மேற்கு-வடமேற்கு திசையில் தமிழகம்-புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். இதன் காரணமாக இன்று வட தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவித்துள்ளன. 


தமிழக-புதுச்சேரி கடலோர பகுதிகள், இலங்கை கடலோர பகுதிகள், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதி, மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு இன்றும் நாளையும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் சென்னை, எண்ணூர், கடலூர், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், பாம்பன் மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.

Tags:    

Similar News