ஆடிப்பூர பெருவிழாவை யொட்டி திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் இன்று தேரோட்டம்
- தேரோட்டம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
- அறம் வளர்த்த நாயகி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருவையாறு:
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறில் திருக்கயிலாய பரம்பரை தருமபுரம் ஆதீனம் மடத்திற்கு சொந்தமான அறம்வளர்த்தநாயகி உடனுறை ஐயாறப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடிப்பூர பெருவிழா 11 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான ஆடிப்பூர விழா கடந்த மாதம் (ஜூலை) 29-ந்தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை பல்லக்கிலும், மாலை வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி வீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, அறம் வளர்த்த நாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு ஓம் சக்தி.. ஓம் சக்தி... என பக்தி கோஷம் முழக்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது பல்வேறு முக்கிய வீதிகளின் வழியாக பக்தர்கள் வெள்ளத்தில் அசைந்தாடி சென்றது. தேரானது 4 ரதவீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது.
விழா ஏற்பாடுகளை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகளின் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர், பணியாளர்கள் செய்திருந்தனர்.