53 ஆண்களை மயக்கி வலையில் வீழ்த்திய பெண்
- திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
- திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் குமார்(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 35 வயதான இவர் தாராபுரம் - உடுமலை சாலையில் பேக்கரி மற்றும் கால்நடை தீவனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். குமாருக்கு 35 வயதுக்கு மேல் ஆகியும் திருமணம் முடிக்க பெண் கிடைக்காததால் இவரது உறவினர்கள் தீவிரமாக வரன் தேடி வந்தனர்.
இதற்கிடையில், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு மேட்ரிமோனியல் ஆப் மூலம் மூலம் சந்தியா (35) என்பவருடன் குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் வாட்ஸ்அப் மூலம் தொடர்ந்து பேசி வந்தனர். அப்போது, தனது திருமணத்துக்கு தமிழ்ச்செல்வி என்ற இடைத்தரகர் வரன் தேடிக் கொண்டிருப்பதாக சந்தியா தெரிவித்ததுடன், தமிழ்ச்செல்வியையும் குமாருக்கு அறிமுகப்படுத்தி உள்ளார். அதோடு திருமண வரன் அமையாமல் இருந்ததால் சந்தியாவை திருமணம் செய்ய குமார் விரும்பியுள்ளார். இதனிடையே, இருவரும் நெருங்கி பழகி வந்த சமயத்தில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை, வீட்டில் அவசரமாக திருமண ஏற்பாடு செய்கிறார்கள் எனக் கூறி, தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு குமாரிடம் சந்தியா வற்புறுத்தி உள்ளார்.
இந்த நிர்பந்தத்தின் காரணமாக தமிழ்ச்செல்வி தலைமையில் குமாருக்கும் சந்தியாவுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பழனி அருகே உள்ள ஒரு கோவிலில் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தை குமாரின் பெற்றோர் ஏற்றுக்கொண்ட நிலையில் சந்தியாவுக்கு 12 பவுன் நகைகள், புடவைகள் என அனைத்தையும் வாங்கி கொடுத்து நன்றாக பார்த்துக் கொண்டனர். இதனிடையே, இவர்களுடைய திருமண வாழ்க்கை 3 மாதங்கள் கடந்த நிலையில் சந்தியாவின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
சந்தியா தனக்கு 30 வயது எனக் கூறிய நிலையில் அவர் கூறிய வயதுக்கும், அவரது தோற்றத்திற்கும் பொருத்தம் இல்லாமல் இருந்ததால் அவரது அடையாள அட்டையை குமார் வாங்கி பார்த்துள்ளார். அதில், கணவர் பெயர் இடத்தில் சென்னையை சேர்ந்த வேறு ஒருவரின் பெயர் இருந்ததும், வயது அதிகமாக இருப்பதும் தெரியவந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குமார், சந்தியாவிடம் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது, குமார் தரப்பிற்கும் சந்தியாவிற்கும் கடுமையாக வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில், கோபமடைந்த சந்தியா, குமாரையும், அவரது குடும்பத்தையும் மிரட்டினார்.
இதனால் உஷாரான குமார், தனது மனைவி சந்தியாவை சமாதானம் செய்வதுபோல் பேசி நைசாக தாராபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசாரிடம் நடந்த சம்பவங்களை எடுத்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சந்தியா போலீஸ் விசாரணையின் போதே அங்கிருந்து தப்பிச்சென்று விட்டார்.
இதைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் சந்தியா குறித்த தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில், சந்தியாவுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஒரு நபருடன் திருமணம் முடிந்ததும் அவருக்கு ஒரு குழந்தை இருப்பதும் தெரிவந்தது. அந்த நேரத்தில், தனது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சந்தியா அவரை விட்டு பிரிந்தார். காலப்போக்கில் தனிமையில் இருந்த சந்தியா பணத்திற்காக வேறு திசையில் பயணிக்க தொடங்கினார். திருமணம் ஆகாத நபர்களை குறிவைத்து அவர்களிடம் தொடர் பண மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சந்தியாவின் திருமண மோசடி பட்டியலில் டிஎஸ்பி., ஒரு காவல் ஆய்வாளர், மதுரையில் மற்றொரு போலீசார், கரூரில் ஒரு பைனான்ஸ் அதிபர் என சுமார் 53 பேருடன் திருமணம் நடந்ததாக கூறப்படுகிறது.
தனக்கு திருமணம் நடந்த சில மாதங்களிலேயே கணவருடன் தகராறு செய்து கொண்டு நகை பணத்துடன் சந்தியா தலைமறைவாகி விடுவது தொடர் கதையாக நீடித்து வந்துள்ளது. தமிழகத்தில் சென்னை, திருப்பூர், ஈரோடு, கோவை உள்பட பல்வேறு இடங்களில் திருமணத்திற்கு பெண் தேடும் 40 வயதுக்கு மேற்பட்டோர், திருமணம் ஆன ஆண்கள், அரசு அதிகாரிகள், சர்வேயர், சாப்ட்வேர் என்ஜினீயர் , போலீஸ் அதிகாரிகள் எனச் சந்தியாவின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. கல்யாண ராணியான சந்தியாவின் இந்த திருமண மோசடி திருவிளையாடல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மீம்ஸ்களும் வெளியிட்டு வருகின்றனர்.
இதையடுத்து சந்தியாவை பிடிக்க தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையில் 5 போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் சந்தியாவை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதனிடையே சந்தியாவின் திருமண மோசடி குறித்து தினமும் புது புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
மேட்ரிமோனி மூலம் திருமணமாகாத வாலிபர்களை வலைக்கும் சந்தியா பின்னர் அவர்களுடன் நெருங்கி பழகுவதுடன் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அவர்களை காமவலையில் வீழ்த்தி அவ்வப்போது செலவுக்கு பணம் கேட்டு வந்துள்ளார். இதையடுத்து திருமணம் செய்து ஏமாற்றி உள்ளார். திருமணமானதும் வீட்டின் அறையில் இருந்து வெளியே வராமல் உள்ளே இருந்து நீண்ட நேரமாக செல்போனில் பேசியுள்ளார். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி விசாரணை நடத்தவே சந்தியா திருமண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. அதன்பிறகு கணவர் வீட்டாரை மிரட்டி நகை, பணம் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அவருக்கு உடந்தையாக ஒரு வக்கீல், தமிழ்செல்வி மற்றும் வாலிபர் 4 பேர் இருந்துள்ளனர். சந்தியா சிக்கலில் மாட்டும் போது அந்த கும்பல் வந்து உதவியுள்ளனர். அவர்கள் வாலிபர் வீட்டினரை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். மேலும் ஜீவனாம்சம், சொத்துக்களையும் கேட்டுள்ளனர். கொடுக்க முன்வராத நபர்களிடம் கற்பழிப்பு வழக்கு தொடர்வோம், விவாகரத்து தரமாட்டோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போய் பலர் நகை-பணத்தை கொடுத்துள்ளனர். சிலர் இன்று வரை சந்தியாவுக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுத்து வருகின்றனர். இன்ஸ்பெக்டர் ஒருவரை காம வலையில் வீழ்த்திய சந்தியா 7 மாத கர்ப்பமாகி உள்ளார். பின்னர் கருவை கலைத்து விட்டார். சந்தியாவுக்கு நடவடிக்கை பிடிக்காததால் அவரது தந்தை தற்கொலை செய்து கொண்டார். தாய் பிரிந்து சென்று விட்டார்.
சந்தியாவுக்கு தற்போது பக்கபலமாக தமிழ்செல்வி, ஒரு வக்கீல் உள்பட சிலர் இருந்து வருகின்றனர். அவர்களை பிடித்து விசாரிக்கும் பட்சத்தில் இந்த சம்பவம் குறித்து மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாக வாய்ப்புள்ளது.