செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்குமா?- இன்று தீர்ப்பு
- கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
- இரண்டு முறை ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 3-வது முறையாக ஜாமின் கேட்டு மனு.
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். மருத்துவ காரணங்களை காட்டி ஜாமின் வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.
இதற்கிடையே வழக்குப்பதிவு செய்யப்பட்ட சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரண்டு முறை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 3-வது முறையாக ஜாமின் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்க இருக்கிறார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்த நிலையில் காணொலி மூலம் சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது நீதிமன்ற காவலை வருகிற 22-ந்தேதி வரை நீட்டித்து நீதிபதி எஸ். அல்லி உத்தரவிட்டார்.
அன்றைய தினம் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதால் அவரை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.