உள்ளூர் செய்திகள் (District)

சென்னையில் நேற்று வெயில் வாட்டி எடுத்த நிலையில் இன்று அதிகாலை முதல் மழை

Published On 2024-09-21 01:32 GMT   |   Update On 2024-09-21 01:32 GMT
  • தமிழகத்தில் வரும் நாட்களில் வெயில் படிப்படியாக குறையும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
  • சென்னை மீனம்பாக்கம், கிண்டி, அடையாறு போன்ற இடங்களில் அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது.

சென்னை வானிலை தினந்தோறும் மாறிமாறி வருகிறது. நேற்று முன்தினம் காலையில் லேசான மழை பெய்தது. அன்றைய தினம் பெரும்பாலான இடங்களில் மாலை வரை மேகமூட்டமாக காணப்பட்டது. இதனால் வெயில் தாக்கம் குறைந்து இதமாக இருந்தது.

ஆனால் நேற்று காலையில் இருந்து வெளியில் வாட்டி வதைத்தது. காற்றும் வீசாத காரணத்தினால் வீட்டில் இருக்க முடியவில்லை. ஒரே புழுக்கமாக இருந்தது. இந்த நிலையில் இன்று அதிகாலை முதல் சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

சென்னை கிண்டி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், தரமணி, அடையாறு, மெரினா உள்ளிட்ட பகுதியில் இன்னும் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதனால் இன்று காலை சில்லென்று வானிலை நிலவுகிறது. அதேபோல் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர், ஆவடி போன்ற இடங்களிலும் லேசான மழை பெய்து வருகிறது.

இதற்கிடையே வடக்கு அந்தமான் கடல் பகுதியில் ஏற்படும் வளி மண்டல சுழற்சியின் தாக்கத்தால் வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்' என இந்திய வானிலை துறை அறிவித்துள்ளது. இதனால் தமிழகத்தின் வட மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் அடுத்து வரும் நாட்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக வாட்டி எடுத்த வெயில் அடுத்து வரும் நாட்களில் படிப்படியாக குறையும். மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இது செப்.26 வரை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

Tags:    

Similar News