கோவையில் குழந்தைகளை விற்ற கும்பல் சிக்கியது: கடத்தி விற்றார்களா? விசாரணை
- பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார்.
- குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோவை:
பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேஷ்குமார். இவருடைய மனைவி அஞ்சலி தேவி. இவர்கள் கோவையை அடுத்த சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டியில் ஓட்டல் நடத்தி வந்தனர்.
இவர்கள் பீகாரில் இருந்து குழந்தைகளை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. அதன்பேரில் மகேஷ்குமார், அஞ்சலி தேவி ஆகியோரை சூலூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ஒரு ஆண் குழந்தை, பெண் குழந்தையை மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்பதால் அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் விசாரணை நடத்தி, மீட்கப்பட்ட பெண் குழந்தையை விலை கொடுத்து வாங்கியதாக திம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயன் என்பவரை கைது செய்தனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடையதாக அஞ்சலி தேவியின் தாயார் பூனம் தேவி(61), தங்கை மேகாகுமாரி(21) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். மொத்தம் இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் தெரியவந்தன.
மகேஷ்குமாரும், அஞ்சலி தேவியும், தனது தாய் பூனம் தேவி மற்றும் தங்கை மேகாகுமாரி உதவியுடன், பீகாரில் வறுமையில் தவித்த குடும்பத்திடம் இருந்து அந்த குழந்தையை வளர்த்து ஆளாக்குவதாக கூறி ரூ.1500 கொடுத்து வாங்கியுள்ளனர்.
பின்னர் அந்த குழந்தையை கோவைக்கு கொண்டு வந்து தனது மகள் மற்றும் மருமகனுடன் சேர்ந்து, விஜயனிடம் ரூ.5 லட்சம் வரை பேரம் பேசியுள்ளனர். கடைசியாக இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தையை விஜயனுக்கு விற்பனை செய்துள்ளனர்.
இதேபோல மற்றொரு ஆண் குழந்தையையும் குறைந்த விலைக்கு வாங்கி, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு ரூ.5 லட்சத்துக்கு விற்பனை செய்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் மேலும் சில குழந்தைகளை கடத்தி விற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். அந்த கோணத்திலும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.