உள்ளூர் செய்திகள்

தனியார் பள்ளிகளில் இலவசமாக படிக்க விரும்பும் குழந்தைகள் குலுக்கல் மூலம் தேர்வு: 28-ந்தேதி நடக்கிறது

Published On 2024-05-23 10:19 GMT   |   Update On 2024-05-23 10:19 GMT
  • சென்னை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 342 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
  • 636 தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

சென்னை:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 25 சதவீத மாணவர்கள் இலவசமாக சேர்க்கப்படுகிறார்கள். பொருளாதாரத்தில் நலிவடைந்த ஏழை, எளிய குழந்தைகளுக்கு வருகிற கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் ஒரு மாதம் நடைபெறுகிறது.

ஆன்லைன் வழியாக தனியார் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. மற்றும் முதல் வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். சென்னை மாவட்டத்தில் 10 ஆயிரத்து 342 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 9 ஆயிரத்து 51 விண்ணப்பங்கள் தகுதியானதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் பள்ளிகள் சேர்க்கைக்கு அனுமதிக்கப்பட்ட இடங்களை விட அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. பள்ளிகளில் 28-ந்தேதி குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு நடைபெற உள்ளது.

எனவே இணைய வழியில் விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ள அனைத்து சான்றிதழ்களுடன் பெற்றோர்கள் தவறாமல் கலந்து கொள்ளுமாறு சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் நகடே தெரிவித்துள்ளார்.

சென்னை மாவட்டத்தில் 636 தனியார் பள்ளிகளில் இலவசமாக மாணவர்கள் படிப்பதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளது.

Tags:    

Similar News