கடமலை-மயிலை ஒன்றியத்தில் வரத்து அதிகரித்ததால் மிளகாய் விலை சரிவு
- மழையால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது.
- பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
வருசநாடு:
தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றிய த்தில் குமணன்தொழு, கோம்பைத்தொழு, பசுமலைதேரி, அரண்மனைப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மிளகாய் சாகுபடி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் மிளகாய் தேனி, சின்னமனூர் உள்ளிட்ட சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக கடமலை-மயிலை ஒன்றிய கிராமங்களில் அடிக்கடி மழை பெய்து வருகிறது. இதனால் மிளகாய் விளைச்சல் அதிகரித்து விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த 3 மாதம் வரை ஒரு கிலோ மிளகாய் ரூ.40 வரை சந்தைகளில் விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தொடர்ந்து வரத்து அதிகரித்து காணப்படுவதன் காரணமாக படிப்படியாக விலை குறைந்து தற்போது ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.
இதனால் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய்களை பறிக்காமல் செடியில் விட்டு விடுகின்றனர். இதனால் மிளகாய் செடியில் பழமாகிறது. விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், மிளகாய் வரத்து அதிகரித்தால் விலை குறைவதும் வரத்து குறைந்தால் விலை அதிகரிப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே மிளகாய் விவசாயிகளுக்கு போதுமான அளவில் லாபம் கிடைப்பதில்லை.
எனவே மிளகாய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.