ரேஷன் கடைகளில் தேங்காய், தேங்காய் எண்ணை வழங்க வலியுறுத்தல்
- விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
- ரேஷன் அட்டைகள் மூலம், 6 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 94 பயனாளர்கள் உள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, கிழக்கு மாவட்ட பா.ஜனதா விவசாய அணி சார்பில், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
விவசாய அணி மாவட்டத் தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர்கள் கோவிந்தராஜ், அர்ஜுணன், மகளிர் அணித் தலைவி விமலா, மாநில செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம், அரசு பிரிவு மாவட்டத் தலைவர் தருமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் செந்தில்குமார் பேசியதாவது:-
தமிழகத்தில், 4.63 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் தென்னை உற்பத்தி செய்யப்படுகிறது. தேசிய தேங்காய் உற்பத்தியில் 31.5 சதவீதம் உற்பத்தி செய்து தமிழகம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3,751.26 டன் உற்பத்தி செய்து தேசிய தேங்காய் வியாபார சந்தையில் 27.47 சதவீதம் பங்கு பெறுகிறது. ஆனால் தமிழகத்தில் தென்னை உற்பத்தியாளர்களின் நிலை மிகவும் கவலைக்குரிய நிலையில் உள்ளனர்.
உரிய விலை கிடைக்காமல் அவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும் உற்பத்தி பரப்பளவும் குறைந்து கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் கீழ் பொதுவினியோக திட்டத்தின் கீழ், மக்களுக்கு மாதந்தோறும் வழங்கும் பொருட்களில் தேங்காயையும் கட்டாயம் வழங்க வேண்டும்.
தமிழகத்தில் 2 கோடியே 23 லட்சத்து 40 ஆயிரத்து 635 ரேஷன் அட்டைகள் மூலம், 6 கோடியே 98 லட்சத்து 37 ஆயிரத்து 94 பயனாளர்கள் உள்ளனர்.
மாதம் ஒரு குடும்பத்திற்கு குறைந்தது 10 தேங்காய்களை வழங்குவதன் மூலம் மக்களும் பயன்பெறுவர். தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணை கொடுப்பதன் மூலம் அதனை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கும் பயன் அளிக்கும்.
தேங்காய் உற்பத்தியாளர்களிடம் குறைந்தபட்ச ஆதார விலை கொடுத்து ஆண்டு முழுவதும் அரசு கொள்முதல் செய்தால், தென்னை விவசாயிகளை காப்பாற்ற இயலும்.
அதன்மூலம் தென்னை சார்ந்த பல பொருட்கள் வணிக வாய்ப்பு பெரும். எனவே தமிழக அரசு ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.