பல்லடத்தில் கோவை - திருச்சி நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்
- 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
- சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும்.
பல்லடம் :
பல்லடம் நகரமானது கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மேலும் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையுடன் திருப்பூர், பொள்ளாச்சி, உடுமலை,அவிநாசி, தாராபுரம் ஆகிய மாநில நெடுஞ்சாலைகள் இணைவதால் பல்லடத்தில் வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை எண் 81 ல் தினமும் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேலான வாகனங்கள் செல்கின்றது.
திருமணம் போன்ற சுபநாட்களில் இந்த எண்ணிக்கை 60 ஆயிரத்தைத் தாண்டும்.இதனால் பல்லடம் நகரத்தில் எப்போதும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் அதிகரித்து வந்தது. இதனால் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும், புறவழிச்சாலை வேண்டும், மேம்பாலம் கட்ட வேண்டும் என கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக பல்லடம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்தநிலையில் பல்லடம் அருகே காரணம்பேட்டை முதல் பல்லடம் அண்ணாநகர் வரை உள்ள சுமார் 9 கி.மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்லடம் நகர பகுதியிலும் ரோடு விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதையடுத்து பல்லடத்தில் செட்டிபாளையம் ரோடு பிரிவு முதல் பனப்பாளையத்தில் உள்ள தாராபுரம் ரோடு பிரிவு வரை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் மார்ச் மாத இறுதிக்குள் விரிவாக்கப் பணிகள் முடிவடைந்து, சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடையும் என நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.