1 லட்சமாவது மரக்கன்று நட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்
- மரக்கன்றுகள் நட்டு அதனை முறையாக பராமரிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்.
- ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் நிர்வாகம், மாவட்ட பசுமை குழு, கவின்மிகு தஞ்சை இயக்கம், தன்னார்வ மற்றும் சேவை அமைப்புகள் சார்பில் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தின் கீழ் ஓராண்டில் 1 லட்சம் மரக்கன்றுகள் வளர்க்கும் திட்டம் உலக புவி தினமான 22-4-22 அன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் முதல் மரக்கன்றை நட்டு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மரக்கன்றுகளை நட்டு வந்தார்.
இந்த நிலையில் திட்டம் தொடங்கி ஓராண்டு முடிவதற்குள்ளாகவே 1 லட்சம் மரக்கன்றுகள் நடும் இலக்கு முடிவடைந்தது. அதன்படி இன்று தஞ்சை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் 1 லட்சமாவது மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி 1 லட்சமாவது மரக்கன்று நட்டு வைத்தார். அப்போது இந்த திட்டம் வெற்றிகரமாக குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே முடிவடைந்ததை முன்னிட்டு அனைவரும் கைத்தட்டி வரவேற்றனர்.
பின்னர் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஓராண்டில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் இன்று 1 லட்சமாவது மரக்கன்று நடப்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் பசுமை பரப்பு மற்றும் வனப்பரப்பினை அதிகப்படுத்துவது , பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், பொது மக்களிடம் மரம் வளர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
இதனால் வரை வீடுகள், கல்லூரிகள், பள்ளிகள், கோவில் வளாகங்கள், மருத்துவமனை வளாகங்கள், தொழிற்சாலை வளாகங்கள், ஆற்று படுகைகள், மற்றும் பொது இடங்களில் பாதுகாக்கப்பட்ட வகையில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதில் தன்னார்வ அமைப்புகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், பள்ளிகள் சார்பில் 25 ஆயிரம் மரக்கன்றுகளும், கல்லூரிகள் சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் 15 ஆயிரம் மரக்கன்றுகளும், பேரூராட்சி நிர்வாகம் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும், இதர அரசுத்துறைகள் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் நடப்பட்டுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வகையான மரக்கன்றுகளை நல்ல முறையில் பராமரித்து வளர்க்கும் பணியை சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி இணை செயல்பாடுகளின் பொறுப்பாளர்களும் , அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பு நிர்வாகிகளும் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.
திருவையாறு அரசு இசைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இசைவனம், அன்னை வேளாங்கண்ணி கலைக் கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஆரோக்கிய வனம், சமுத்திரம் ஏரியில் பறவைகள் வனம், மாவட்ட கடற்கரை பகுதிகளில் ஆழி வனம் ஆகவே சிறப்புக்குரியதாகும்.
மரக்கன்றுகள் நடுவதோடு அதனை முறையாக பராமரிப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இயற்கையை பராமரித்து மேம்படுத்த வேண்டும். 99 சதவீத மரங்கள் நல்ல உயிர்ப்புடன் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் கவின்மிகு தஞ்சை இயக்கம் தலைவர் டாக்டர் ராதிகா மைக்கேல், டாக்டர் சிங்காரவேல், ரெட் கிராஸ் டாக்டர் வரதராஜன், பொறியாளர் முத்துக்குமார், மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சங்கரநாராயணன், தாசில்தார் சக்திவேல், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன், உதவி இயக்குனர் சையது அலி, போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.