சின்னசேலம் அருகே சாலை விரிவுபடுத்துவது குறித்து கலெக்டர் நேரில் ஆய்வு
- செல்லியம்பாளத்திற்கு செல்லும் தார் சாலையை 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள்.
- கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள வி. கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாைளயத்திற்கு தார் சாலை ஒன்று செல்கிறது. அந்த 20 அடி சாலையை செல்லியம்பாளையம், ராயப்பனூர், பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வி.கூட்ரோடில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி பூங்கா செயல்பட்டு வருகிறது. கால்நடை ஆராய்ச்சி பூங்கா நிர்வாகத்தினர் இந்த சாலை பகுதியில் பல்வேறு கட்டிடப் பணிகள் மேற்கொண்டு வருவதால் வருங்காலங்களில் இந்த சாலையில் கிராம மக்கள் செல்வதற்கு நிரந்தரமாக தடை செய்யப்படலாம் என்று கருதி மாவட்ட கலெக்டர் இடம் மனு கொடுக்கப்பட்டது.
அந்த மனுவில் கூறி இருப்பதாவது:- வி கூட்ரோட்டில் இருந்து செல்லியம்பாளத்திற்கு செல்லும் தார் சாலையை ராயப்பனூர் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது 20 அடி அகலத்தில் உள்ள இந்த சாலையை 30 அடி சாலையாக மாற்றி தர வேண்டும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்து கோரிக்கை வைத்தனர்.
கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட சாலையை மாவட்ட கலெக்டர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பொழுது உடன் இருந்த வருவாய் துறை நிறுவன அதிகாரியிடம் உள்ள பதிவேடுகளை பார்த்து ஆய்வு செய்து தற்போது பயன்பாட்டில் உள்ள சாலை விபரம் குறித்த தகவல் கேட்டு அறிந்தார். பின்னர் இதன் மீது பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். ஆய்வின்போது மாவட்ட திட்ட இயக்குனர் மணி, வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, சின்னசேலம் யூனியன் சேர்மேன் சத்தியமூர்த்தி, சின்னசேலம் வருவாய் வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி மன்ற தலைவர், செல்லியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் ஆய்வில் பங்கேற்றனர்.