329 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவு
- கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
- 16 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுகொண்டு, மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது:-
ஒவ்வொரு வாரம் திங்கட்கிழமைகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெறப்பட்டு, தொடர்புடைய துறை வைக்கப்பட்டு உரிய தீர்வுகள் காணப்பட்டு வருகிறது.
அவ்வாறு நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், பட்டா வேண்டுதல், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 329 மனுக்கள் வரப்பெற்றன.
பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமெனவும், பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது துறை அலுவலர்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு அதற்கான தீர்வினை விரைந்து காண வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.
கூட்டத்தில் தருமபுரி மாவட்ட தாட்கோ பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் பயிற்சி பெற்ற 22 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் தொழில் முனைவோர் பயிற்சி கையேடுகளையும், சமூக நலத்துறையின் சார்பில் முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற ஆதரவற்றோர் இல்லங்களை சார்ந்த 16 மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களையும் மாவட்ட கலெக்டர் சாந்தி வழங்கினார்.
கூட்டத்தில் தனித்துணை கலெக்டர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் பவித்ரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வம் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.