தேனியில் மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடத்துவது குறித்து ஆலோசனை-கலெக்டர் ஷஜீவனா பங்கேற்பு
- தேனியில் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது.
- இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் இணை கல்வி கழகத்தின் சார்பில், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கான மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்ச்சி 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு இளைய தலைமுறையினர் குறிப்பாக கல்லூரி மாணவர்களுக்கு தமிழர் மரபும், நாகரீகமும், பெண்கள் மேம்பாடு, சமூக பொருளாதார முன்னேற்றம், மொழி மற்றும் இலக்கியம், கலை மற்றும் பண்பாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு "மாபெரும் தமிழ் கனவு"சொற்பொழிவு நிகழ்ச்சியினை நடத்திட உத்தரவிட்டு, செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, தேனி மாவட்டத்தில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி, வடபுதுப்பட்டி நாடார் சரஸ்வதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, போடி அரசினர் பொறியியல் கல்லூரியில் சிறந்த சொற்பொழிவாளர்களைக் கொண்டு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வு நடத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 13-ந் தேதி தேனி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாபெரும் தமிழ்க் கனவு தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை சொற்பொழிவு நிகழ்வில் "கல்வியால் கடந்த காரிருள்" என்னும் தலைப்பில் கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஸ்யபுத்திரன் சிறப்புரையாற்ற உள்ளார் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.