வைகை ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது- கரையோர மக்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை
- மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
- முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது.
மதுரை:
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் கன மழை காரணமாக நீர் நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில் மதுரை மாவட்டத்திலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று 3-வது நாளாக விடிய விடிய பெய்து மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. பலப்பகுதிகளில் குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கண்மாய், குளங்களுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாய பணிகள் தொடங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு விவரம் வருமாறு-
மதுரை வடக்கு-6 மி.மீ., தல்லாகுளம்-8மி.மீ., பெரியப்பட்டி-21மி.மீ., விரகனூர்-4மி.மீ., சிட்டம்பட்டி-14மிமீ., கள்ளந்திரி-24மிமீ., இடையப்பட்டி-12மி.மீ., தணியாமங்கலம்-12மி.மீ., மேலூர்-12மி.மீ., வாடிப்பட்டி-62மி.மீ., சோழவந்தான்-50மி.மீ., ஆண்டிப்பட்டி-75மி.மீ., உசிலம்பட்டி-10மி.மீ., குப்பணம்பட்டி-20மி.மீ., மாவட்டம் முழுவதும் சராசரியாக 17 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பொருட்சேதம் மற்றும் உயிர் சேதம் இல்லை என்றாலும் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சேதமடைந்தன.
இன்னும் மழை பெய்யும் என்பதால் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முல்லை பெரியாறு அணை, வைகை அணை பகுதியில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 531 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 967 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
வைகை அணையில் நீர் மட்டம் 56.28 அடியாக உள்ளது. அணைக்கு 1242 கன அடி தண்ணீர் வரும் நிலையில் 969 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வைகை ஆற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதாலும், மழை வெள்ளம் காரணமாகவும் ஆற்றில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் வைகை கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கவும் இறங்கவும் வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.