தேனி மாவட்டத்தில் உரத்துடன் கூடுதல் இணைபொருள் விற்றால் கடை உரிமம் ரத்து கலெக்டர் எச்சரிக்கை
- உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- விவசாயிகள் உரம்கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் குறித்த புகார்கள் தேனி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தேனி:
தேனி மாவட்டத்தில் உள்ள தனியார் உரக்கடைகளில் விவசாயிகளின் விருப்பம் இன்றி உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது,
தேனி மாவட்டத்தில் விவசாய பணிகளுக்கு நடப்பு பருவத்திற்கு தேவையான யூரியா 1021 டன், டி.ஏ.பி 466 டன், பொட்டாஸ் 642 டன், சூப்பர் பாஸ்பேட் 363 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 2844 டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தனியார் உரக்கடைகளில் விவசாயிகளின் விரும்பம் இன்றி உரங்களுடன் கூடுதல் இணைபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்யக்கூடாது. மானிய விலை உரங்களை விவசாயிகள் ஆதார் எண்ணை பயன்படுத்தி விற்பனை முனைய கருவி மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். பயிர்சாகுபடி பரப்பளவிற்கு ஏற்ப உரங்களை பரிந்துரை செய்ய வேண்டும். நிர்ணயிக்கப்பட்டதை விட கூடுதல் விலைக்கு உரங்களை விற்பனை செய்யக்கூடாது.
இந்த விதிமுறைகளை மீறி செயல்படும் உரக்கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரம்கிடைப்பதில் ஏற்படும் பிரச்சினைகள், அதிக விலைக்கு உரம் விற்பனை செய்பவர்கள் குறித்த புகார்கள் தேனி வேளாண்மை உதவி இயக்குனரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.