உள்ளூர் செய்திகள்

சென்னை மெரினாவில் ராட்சத அலையில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு

Published On 2022-07-03 03:19 GMT   |   Update On 2022-07-03 03:19 GMT
  • திடீரென எழுந்த ராட்சத அலையில் ஆரியன் எதிர்பாராத விதமாக சிக்கி கடலில் இழுத்து செல்லப்பட்டார்.
  • கடலில் வாலிபர் ஒருவர் தத்தளிப்பதை கண்ட மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

சென்னை:

குஜராத் மாநிலம் ஆமதாபாத் பகுதியை சேர்ந்தவர் அசோக் ஜெயின். இவரது மகன் ஆரியன் ஜெயின் (வயது 20). இவர் காட்டாங்குளத்தூரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி, அதே பகுதியில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் படித்து வந்தார். இந்தநிலையில் ஆரியன் நேற்று காலை சுபாஷ் சந்திர போஸ் சிலை அருகே மெரினா கடலில், தனது நண்பர்கள் 8 பேருடன் குளிக்க சென்றார். இவ்வாறு அவர்கள் குதூகலமாக குளித்து கொண்டிருந்தபோது, திடீரென எழுந்த ராட்சத அலையில் ஆரியன் எதிர்பாராத விதமாக சிக்கி கடலில் இழுத்து செல்லப்பட்டார்.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் கடலில் மீன் பிடித்து விட்டு கரை திரும்பும் மீனவர்கள், கடலில் வாலிபர் ஒருவர் தத்தளிப்பதை கண்டனர். உடனடியாக அவரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

அப்போது வாலிபர் மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பதை கண்டு, ஆம்புலன்ஸ் மூலம் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News